×

புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய போலி வீடியோ வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் பகிரங்க மன்னிப்பு கேட்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!!

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய போலி வீடியோ வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் பகிரங்க மன்னிப்பு கேட்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் திங்கள்கிழமைக்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்பதாக பிரசாந்த் உம்ராவ் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான செய்தி பரவியது. தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளி ஒருவர் தாக்கப்பட்டதாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக செய்தி தொடர்பாளார் பிரசாந்த உம்ராவ் போலி வீடியோ வெளியிட்டார்.

போலியாக செய்தி பரப்பி பதற்றத்தை உருவாக்கியதாக பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் மீது வழக்கு பதிவு செய்து அவரை தமிழக காவல்துறையின் முன் ஆஜராகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனிடையே தன் மீதான வழக்கை ரத்துசெய்யக் கோரி பா.ஜ.க. நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் பிஆர் கவாய் மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணை நடத்தியது.

அப்போது, 7 ஆண்டாக வழக்கறிஞர் பொறுப்பில் உள்ள பிரசாந்த் உம்ராவ் பொறுப்புடன் நடந்துகொள்ளவில்லை என்று நீதிபதி கவாய் தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், பிரசாந்த் உம்ராவ் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து பொய்யான வதந்தி பரப்பி தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்கியுள்ளார். அவர் காவல் துறை முன்பு இன்னும் மன்னிப்பு கூட கேட்கவில்லை என்று வாதிடப்பட்டது. அப்போது பிரசாந்த் உம்ராவ் தரப்பு, தெரியாமல் ட்விட் செய்துவிட்டேன்; தவறு என தெரிந்தவுடன் நீக்கிவிட்டேன் என்று கூறியது.

இந்த விவகாரத்தில் நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பேன் என்றும் உறுதிமொழி அளித்தது. இதனை ஏற்று, வரும் திங்கள்கிழமை பிரசாந்த் உம்ராவ் காவல்துறையினர் முன்னர் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் காவல்துறை எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு செல்ல வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து பாஜகவின் பிரசாந்த் உம்ராவ் வதந்தி பரப்பிய விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

The post புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய போலி வீடியோ வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் பகிரங்க மன்னிப்பு கேட்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Supreme Court ,executive ,Prashant Umrao ,Delhi ,Administrator ,
× RELATED கெஜ்ரிவால் மேற்கொள்ளும் தேர்தல்...